×

மூளையின் முடிச்சுகள் எண்ணங்களின் வீரியம்!

நன்றி குங்குமம் தோழி

காயத்ரி மஹதி, மனநல ஆலோசகர்

“எண்ணம் போல் வாழ்க்கை”… இந்த வரியை பல இடங்களில் படிக்கும் போது, மக்களின் மனதுக்குள் வேத வாக்காக மாறியுள்ளது என்பது மட்டும் தெரிய வருகிறது. ஏனென்றால் மனம் என்றாலே உணர்வுகள் என்று கூறுவது போல், மனம் என்றாலே எண்ணங்களும்தான் சேர்ந்து இருக்கின்றன. மனிதனை உடல், உயிர், எண்ணங்கள் என்று பிரித்துப் பார்த்து பழக வேண்டிய கட்டாயத்துக்குள் நாம் அனைவரும் இருக்கின்றோம்.

இன்றைக்கு அந்த எண்ணங்களுக்குள் தோன்றும் கனவுகளை அனுபவிக்க உடலும், உயிரும் எப்பொழுதும் ஆயுத்தமாக இருக்கிறது. அதற்கேற்றாற் போல், தற்போதைய நுகர்வு கலாச்சாரமும் அதற்கு வழிவகுக்கிறது. இங்கு நுகர்வு கலாச்சாரமும், பண்பாடு கலாச்சாரமும் இணைந்து, மனிதனின் எண்ணங்களை இன்னும் குழப்பமடைய வைக்கின்றன. அதனால் தான், சிலர் தங்களுடைய எண்ணங்களுக்குத் தேவையானதை செய்ய, அவரவரின் பண்பாடு கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு சில அத்துமீறல்களை செய்ய முயற்சிக்கிறார்கள். அந்த அத்து மீறல்களுக்குப் பின்னால் நம் சமூகம் கொடுக்கும் விளைவுகளுக்கு மனிதர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளை, ஒரு மனிதனின் இயல்பான ஆதங்கங்கள் என்று யாரும் எடுப்பதில்லை.

ஏனென்றால், உலகத்திலுள்ள அனைத்துச் சட்டங்களும், தத்துவங்களும், ஆன்மீகமும் மனிதர்கள் செய்யும் எந்தவொரு செயலையும் நீதி, அநீதி என்று வகைப்படுத்தும் தன்மையைத்தான் காலம் காலமாக மக்களுக்கு உரைத்துச் சொல்கின்றது. ஆனால் எல்லா நேரமும், நீதியும், அநீதியும் மட்டும் மனிதர்களுக்கிடையில் என்றுமே பேசப்படுவதில்லை. சில நேரங்களில் மனிதர்கள் ஆசைப்பட்டு செய்யும் சில விஷயங்களுக்கு அவர்கள் வாழும் பண்பாட்டுச் சூழல் ஒன்று அனைவரின் மனதிற்குள்ளும் சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டு, எந்தப் பக்கம் நிற்பது என்று திக்குத் தெரியாமல் மவுனம் காக்கிறது.

அந்த மவுனத்தின் முன்தான், அனைவருமே சூழல் கைதிகளாக மாறி விடுகிறோம். ஓரளவுக்கு மக்கள் அனைவரும் அவர்களுக்குத் தெரிந்த வகையில் நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் இருக்கத்தான் முயற்சி செய்கிறார்கள். ஆனால் இங்கு நேர்மையும், ஒழுக்கமும் ஒவ்வொரு மனிதர்களின் ஆளுமைத் தன்மையை (Personality) பொறுத்து செயல்படுத்தப்படுகிறது. இன்றைய டிஜிட்டல் காலக்கட்டத்தில் அரசியலிலிருந்து அனைத்து இடங்களிலும் நேர்மையும், ஒழுக்கமும் குறைந்து விட்டது என்று பலராலும் விமர்சிக்கப்படும் பொதுக் கருத்தாக மாறி நிற்கிறது.

உதாரணத்திற்கு, குடும்பங்களில், தொழில் செய்யும் இடங்களில் எல்லாம் சிலர் கூறுவது, முன்னாடி எல்லாம் ஒரு அட்டைச் சீட்டில் பணத்தை எழுதிக் கொடுத்தால் போதும். பணம் கொடுப்பவரும் நம்பிக் கொடுப்பார், வாங்கியவரும் முறையாக சேர வேண்டிய இடத்தில் கொடுத்து விடுவார்கள். ஆனால் இன்று அம்மாதிரியான எண்ணங்கள் ஏன் குறைவாகிவிட்டது என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.

ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படைத் தேவையை மீறி ஆசைப்படுவது என்னவென்றால், காதலும், பணமும் தான் பெரும்பாலும் இருக்கும். ஏன் மனிதன் தனக்கான பணத்தின் மீதும்,, தனக்கான காதலின் மீதும் ஆசைப்படுகின்றான் என்றால், இரண்டுமே மனிதனுக்கு தேவையான சுதந்திரத்தை தரக் கூடியது என்று நம்புகிறார்கள். அதனால் இவை இரண்டிலும் உள்ள ஆர்வங்களால் இன்றைக்கு தனிப்பட்ட மனிதனின் எண்ணங்களும் திசை மாறுகின்றது, உணர்வுகளும் பாதிப்படைகின்றது.

அதனால்தான் மிக நெருங்கிய வட்டங்களிலும், நெருங்கிய குடும்ப உறவுகளிலும் நாம் மிகவும் அதிகமாக நம்பும் உறவுகளுக்குள்ளேயே நம்பிக்கை துரோகங்கள் அதிகமாகிவிட்டது என்று கூறுவதை அடிக்கடி கேட்க நேரிடுகிறது. அதனால் இன்று உறவுகளால் மனித மனதுக்குள் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி பெரிதாக பேச விரும்புவதில்லை. உண்மையில் ஒரு தனி மனிதன் நம்பிக்கை துரோகத்தால் ஏற்படும் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர சில வருடங்கள் அந்த வலியை ஏற்க வேண்டியதாக இருக்கிறது. இவை எல்லாமே நெருங்கிய நபர்கள் மீது வைத்த நம்பிக்கையும், பாதுகாப்பு உணர்வும் உடையும் போது, மனதளவில் பாதுகாப்பற்ற தன்மையும் மன அழுத்தங்களில் தொடர்ந்து இருக்குமளவிற்கு அதன் பாதிப்பு இருக்கிறது.

என்னதான் இதில் அறிவுப்பூர்வமாக பேசினாலும், நெருங்கிய உறவால் தங்கள் உறவுக்குள் இருந்த நேர்மை பாதிக்கப்படும் போதும், அதனால் ஏற்பட்ட அவமானமே, தன் நேர்மைக்கான ஒழுக்க விதி மீறலாக யோசிக்கும் போது, உணர்வுகள் பாதிக்கப்படுகிறது.

மனிதன் என்றுமே தன்னுடைய உணர்வே பெரியது என்று அதன் முன் சரணடைய பார்க்கிறான். அதன் வலி கொடூரமாக இருப்பினும், அந்த வலிக்கு தன்னைத்தானே தயார்படுத்திக் கொண்டு நீதி வேண்டும் என்று கேட்கும் போது, எதிரில் இருப்பவனின் மவுனம் பல வருடங்கள் ஆனாலும், அந்த மவுனத்தை உடைத்து வார்த்தைகள் வெளிவருவதற்கு மண்டியிட்டு தவம் கிடக்கும் உள்ளங்கள் தான் அதிகமாக இருக்கிறது.அப்படியென்றால் இம்மாதிரியான உணர்வுக்குள் இருக்கும் இந்த எண்ணங்களின் தாக்கம்தான் என்ன என்பதை அடுத்தக் கட்டுரையில் பார்ப்போம்…

The post மூளையின் முடிச்சுகள் எண்ணங்களின் வீரியம்! appeared first on Dinakaran.

Tags : Gayatri Mahati ,Thought ,
× RELATED சந்திரபாபுவின் சைக்கிள்...